1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது

☎#சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

மெட்ராஸ் மாநகரம் பல்வேறு விஷயங்களிலும் உலகின் மற்ற நகரங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது.

அப்படி மெட்ராஸ் முந்திக் கொண்ட ஒரு விஷயம்தான் – தொலைபேசி.அதாவது கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியை கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன.

கொஞ்சம் விவரமா சொல்றதா இருந்தா மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் ரங்கூன் ஆகிய நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் ஆரம்பிக்க 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி (ORIENTAL TELEPHONE COMPANY) என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த அனுமதியைப் பெற்று இந்தியாவில் டெலிபோன் தொழிலில் காலடி எடுத்துவைத்தது.

இந்த நிறுவனம் முதலில் அலுவலகம் தொடங்கியது மெட்ராசில்தான். 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் 37ஆம் நம்பர் கட்டடத்தில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.

புதிதாக தொலைபேசி இணைப்பகம் தொடங்கி முதன் முதலா இதே  9ஜன 28ல்) நாளில் கனெக்சன் கொடுக்கப்பட்ட சமயத்தில், சுமார் 4 லட்சம் மக்கள் வசித்த மெட்ராசில், வெறும் 17 பேர் மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்தினர்.

அந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. அந்தக் கால வர்த்தகர்கள் இடையே தொலைபேசிக்கு பெரிய வரவேற்பு எதுவும் இல்லை.சாதாரண மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

எனவே தொலைபேசி நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதுவும் பெரிதாக எடுபடவில்லை. 1910ஆம் ஆண்டு கூட வெறும் 350 பேரிடம் மட்டுமே தொலைபேசி இருந்தது.

அதிலேயே நிறைய கிராஸ் டாக், ஒருவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் வேறு ஒருவருக்கு அழைப்பு செல்வது போன்ற பிரச்னைகள் இருந்தன.

1922ஆம் ஆண்டு ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியின் லைசென்சை புதுப்பிக்கும் தருணம் வந்தது.அப்போது அக்கம்பெனிக்கு அரசு மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்தது.

அதாவது, உள்நாட்டு நிறுவனத்திற்கு கம்பெனியை கைமாற்ற வேண்டும், தொலைபேசித் தொழில்நுட்பத்தை நவீனமாக்க வேண்டும், இதற்கு ஏதுவாக கட்டணத்தை உயர்த்த வேண்டும் ஆகியவை தான் அந்த நிபந்தனைகள்.

இதன்படி 1923ஆம் ஆண்டு, ரூ.5 லட்சம் முதலீட்டில் மெட்ராஸ் டெலிபோன் கம்பெனி லிமிடெட் தொடங்கப்பட்டது. இதனிடையே மெல்ல மெல்ல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1224ஆக உயர்ந்தது.

இது மட்டுமில்லாமல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், துறைமுகம், சால்ட் குவார்ட்ரஸ் ஆகிய இடங்களில் மக்கள் வசதிக்காக பொதுத் தொலைபேசிகளும் அமைக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் இதனைப் பெரிதாக பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில்தான் லண்டன் தொலைபேசி இணைப்பகத்தைப் போல மெட்ராஸ் இணைப்பகத்தையும் தானியங்கி முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எர்ரபாலு செட்டித் தெரு அலுவலகம் போதாது என்பதால் 1925ஆம் ஆண்டு சைனா பஜாரில் 21 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. அங்கு உடனடியாக ஒரு அலுவலகம் கட்டப்பட்டு அந்த ஆண்டு டிசம்பர் மாதமே பால் காய்ச்சப்பட்டது.

அதுதான் சென்னையின் ‘டெலிபோன் ஹவுஸ்’.அப்போதெல்லாம் தொலைபேசி ஒயர்கள் தலைக்கு மேலாகத்தான் சென்று கொண்டிருந்தன. கோவில் தேர் திருவிழாக்கள், சுழன்றடிக்கும் காற்று என பல காரணங்களால் இந்த ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கின.

இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பூமிக்கு அடியில் கேபிள் பதிப்பது என மெட்ராஸ் டெலிபோன்ஸ் முடிவெடுத்தது. 1927-28 காலகட்டத்தில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று கிண்டி வரை கேபிள்கள் பதிக்கப்பட்டன.

1932இல் பெரம்பூர், ராயபுரம், துறைமுகம் என சென்னையின் முக்கியப் பகுதிகள் அனைத்தின் வயிற்றிலும் டெலிபோன் வயர்கள் புகுந்து புறப்பட்டன.

1934ஆம் ஆண்டிற்கு முன்பு வரை டெலிபோன் டைரக்டரி என்பது வெறும் ஒருசில தாள்கள் கொண்டதாகவே இருந்தது. 1934 அக்டோபர் மாதம் தான் பல வண்ண விளம்பரங்களுடன் கனமான முதல் டெலிபோன் டைரக்டரி வெளியிடப்பட்டது.

பின்னர் மெல்ல மெல்ல டெலிபோனின் உபயோகத்தை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே சென்னையில் மவுண்ட் ரோடு, மாம்பலம் ஆகிய இடங்களில் இணைப்பகங்கள் தொடங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் நிறைய ராணுவத்தினர் தங்கி இருந்ததால், அவர்களின் வசதிக்காக அங்கு ஒரு தொலைபேசி இணைப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், லண்டனில் தயாரிக்கப்படும் போன்கள் அனைத்தும் போர்த் தேவைகளுக்காக அனுப்பப்பட்டுவிட்டதால், மெட்ராசிற்கு புதிய போன்கள் வருவது அடியோடு நின்றுபோனது. இதனால் மெட்ராஸ் டெலிபோன்ஸ் கிட்டத்தட்ட முடங்கிப் போனது என்றே கூட சொல்லலாம்.

இந்தப் போர் தொலைபேசிகளின் பயன்பாட்டை அரசிற்கு தெளிவாகப் புரிய வைத்தது. எனவே அரசே தொலைபேசி தொழிலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டெலிபோன்ஸ் கம்பெனியின் இயக்குநர்கள் கடைசி முறையாக 1943 மார்ச் 26ந் தேதி சென்னையில் உள்ள டெலிபோன் ஹவுசில் கூடிப் பேசி கனத்த இதயத்தோடு கலைந்து போயினர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டெலிபோன் தொழிலை அரசு ஏற்றுக் கொண்டது.

இப்படித் தான் மெட்ராஸ் மாநகரில் தொலைபேசிகள் அறிமுகமாகி, இன்று சென்னைவாசிகள் உட்ப்டஅனைவர் கைகளிலும் செல்போன்களாக சிணுங்கிக் கொண்டிருக்கின்றதாக்கும்!📲

Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்